1. அக்கம் பக்கம் – சுற்றுப்புறம் Neighbourhood
நாம் அக்கம் பக்கத்தினருடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2. அருமை பெருமை – முக்கியத்துவம் Importance
ஒருவர் அருகில் இல்லாத போது தான் அவருடைய அருமை பெருமை நமக்குப் புரியும்.
3. அல்லும் பகலும் – ஒய்வில்லாமல் Without rest
பாரதி அல்லும் பகலும் தன் குடும்பத்திற்காக உழைத்தாள்.
4. ஆடல் பாடல் – நடனமும் பாட்டும் / கொண்டாட்டம் Dance and sing
ரதியின் திருமண வரவேற்பு ஆடலும் பாடலுமாகக் களை கட்டியது.
5. இன்ப துன்பம் – மகிழ்ச்சியும் துயரமும் Joy and sorrow
இன்ப துன்பம் மாறி மாறி வருவதே வாழ்க்கை.
6. ஈவிரக்கம் – கருணை Mercy
கொலைகாரன் ஈவிரக்கம் இன்றி அனைவரையும் கொன்றான்.
7. அன்றும் இன்றும் – எப்பொழுதும் Always
பெரியோர்கள் வாக்கு அன்றும் இன்றும் பொருந்துவதாகவே இருக்கிறது.
8. உயர்வு தாழ்வு – உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு High and Low status
புதிதாக பதவி ஏற்றுள்ள மந்திரி உயர்வு தாழ்வு பாராமல் அனைவரிடமும் சமமாக பழகினார்.
9. ஓட்டமும் நடையும் – விரைவாக Rushing
மழை பலமாகப் பெய்யத் தொடங்கியதால், அமுதா ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தாள்.
10. கண்ணீரும் கம்பலையும் – ஆழ்ந்த துயரம் In tears
கோவலனின் மரணச் செய்தி கேட்ட கண்ணகி, கண்ணீரும் கம்பலையுமாக பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கச் சென்றாள்.
11. கண்ணும் கருத்தும் – கவனமாக Careful
மாறன் தேர்வுக்குக் கண்ணும் கருத்துமாகப் படித்தான்.
12. சாக்குப் போக்கு – பொய்க் காரணம் Excuse
தாமதமாக வந்ததற்கு மாலதி சாக்குப் போக்குக் கூறினாள்.
13. கார சாரம் – காரமாக/ ருசியாக Spicy and tasty
விடுதியில் இருந்து வந்த மகனுக்கு கார சாரமாக சமைத்துக் கொடுத்தாள் பார்வதி.
14. நரை திரை – முடி வெளுத்தலும் தோல் சுருங்குதலும் Greyed hair and wrinkled skin
மனிதனுக்கு வயதாகும் போது நரையும் திரையும் இயற்கையே.
15. பழக்க வழக்கம் – அன்றாடச் செயல்கள் Routine habits
நாம் நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் வாழ்க்கை சிறக்கும்.
16. பட்டம் பதவி – படிப்பும் வேலையும் Education and designation
எவ்வளவு பெரிய பட்டமும் பதவியும் கிடைத்தாலும், பண்பு இல்லாவிட்டால் பயனில்லை.
17. உற்றார் உறவினர் – சொந்தக்காரர்கள் Relatives
மாலாவின் திருமணத்திற்கு அவளது உற்றார் உறவினர்கள் அனைவரும் வந்து ஆசிர்வதித்தனர்.
18. கனவோ நனவோ – ஆச்சரியப்படுதல் Unbelievable
வெளிநாட்டில் இருந்த கணவன் திடீரென்று வந்ததால், அது கனவோ நனவோ என்று மலைத்தாள் கமலா.
19. கள்ளங்கபடு – கள்ளத்தனம் Bad minded
குழந்தைகள் கள்ளத்தனம் இல்லாமல் இருப்பதால்தான், அவர்களைத் தெய்வத்தோடு ஒப்பிடுகிறார்கள்.
20. குறுக்கும் நெடுக்கும் – ஒழுங்கில்லாமல்/ பதட்டத்தில்
பதட்டத்தில் ராகவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
21. கூச்சல் குழப்பம் – இரைச்சல் Confusion
விமானம் காணாமல் போன செய்தி கேட்டவுடன், விமான நிலையத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
22 சட்ட திட்டம் – ஒழுங்கு Law and order
சிங்கப்பூரின் சட்ட திட்டங்கள் உலகளவில் பேசப்படுபவை.
23. சீராட்டிப் பாராட்டி – மிகுந்த அன்பு செலுத்தி Loving and caring
மாறன் தம்பதியினர் தங்கள் மகளை சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர்.
24. சீரும் சிறப்பும் – விமரிசையாக Grandly
மாறன் தன் மகளுக்கு சீரும் சிறப்புமாய்த் திருமணம் செய்து வைத்தார்.
25. தப்பும் தவறும் – தவறாக Mistakes
பயிற்சி இல்லாததால் ரவி கணக்கை தப்பும் தவறுமாய் செய்தான்.
26. தான தர்மம் – பிறருக்குச் செய்யும் உதவி Helping others
நாம் செய்யும் தான தர்மங்கள் நம்மைக் காப்பாற்றும்.
27. நகை நட்டு – நகைகள் Jewels
மாலதியின் கல்யாணத்திற்கு அவளது பெற்றோர் நகை நட்டுகளை வாங்கினர்.
28. நோய் நொடி – வியாதி Disease
ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் தவறாத உடற்பயிற்சியும் இருந்தால் நாம் நோய் நொடி இன்றி வாழலாம்.
29. இன்னார் இனியர் – குறிப்பிட்டவர்கள் Known person
இன்னார் இனியர் என்றில்லாமல் அனைவரையும் சுந்தரம் தன் மகளின் திருமணத்திற்கு அழைத்திருந்தார்.
30. ஏனோ தானோ – கவனமில்லாமல் Carelessly
தனக்குப் பிடிக்காத வேலையை சுமதி ஏனோ தானோவென்று செய்தாள்.
31. கொஞ்சம் நஞ்சம் – சிறிது Little bit
மாலதிக்கு தன் மகன் மீது இருந்த கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையும் போய் விட்டது.
32. திட்டவட்டம் – உறுதியாக Confidently
இனிமேல் சாரதிக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று அவனது தந்தை திட்டவட்டமாகக் கூறினார்.
33. அரை குறை – பாதி / முழுமை பெறாதது Incomplete / Partially
நாம் செய்யும் வேலையை அரை குறையாகச் செய்யாமல், முழுமையாக செய்ய வேண்டும்.
34. அறக்கப் பறக்க – அவசரமாக Hasty
விமானத்திற்கு நேரமானதால் அழகன் அறக்கப் பறக்கக் கிளம்பினான்.
35. ஊரும் பேரும் – அறிமுகம் / தெரிந்த Identity
ஊரும் பேரும் தெரியாத இடத்தில் அருண் பணத்தைத் தொலைத்து விட்டுத் தவித்தான்.
36. எதிரும் புதிரும் – நேர்மாறாக Differently
கவிதாவும் சவிதாவும் இரட்டைச் சகோதரிகள் என்றாலும், குணத்தில் இருவரும் எதிரும் புதிருமாக இருந்தார்கள்.
37. ஏழை எளியவர் – வறுமையில் வாடுபவர் Poor
ஏழை எளியவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை நாம் செய்ய வேண்டும்.
38. ஒட்டி உலர்ந்து – வற்றி / மெலிந்து Thin / Skinny
பசியால் வாடிய பிச்சைக்காரனின் வயிறு ஒட்டி உலர்ந்து போனது.
39. ஒப்பு உயர்வு – ஒப்பிடுதல் Comparable
கடவுளின் கருணை ஒப்பு உயர்வு இல்லாதது.
40. கண்டது கேட்டது – பார்த்ததும் கேட்டதும் See & hear
கண்டது கேட்டது எல்லாம் பொய்யாய் இருக்கலாம். தீர விசாரிப்பதே மெய் ஆகும்.
41. நன்மை தீமை – நல்லது கெட்டது Good & bad
ஒரு செயலில் நன்மை தீமை அறிந்து அதில் இறங்க வேண்டும்.
42. போரும் பூசலும் – சண்டையும் சச்சரவும் War & conflict
இரு நாடுகளுக்கு இடையே இருந்த போரும் பூசலும், இளவரசரின் திருமணத்தால் நீங்கியது.
43. மேள தாளம் – மங்களகரமான மேள இசை Music played in holy occasions.
கோவிலில் மேள தாளத்துடன் தொடங்கிய பூசை இனிதாய் நிறைவடைந்தது.
44. வரவு செலவு – வருவாயும் செலவும் Income & Expenditure
சிறு வரவு செலவு கணக்குகளைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்தால் அவர்களும் கற்றுக் கொள்வார்கள்.
45. அரிய பெரிய – அசாதரணமான Something rare and large
தமிழர்களின் அரிய பெரிய சாதனைகளுள், அவர்களின் கட்டிடக்கலைக் குறிப்பிடத்தக்கது.
46. நீக்குப் போக்கு – சமரசத் தன்மை Flexibility
முதலாளியின் நீக்குப் போக்குத் தன்மையால் தொழிலாளர் பிரச்சினை சுமூகமாகத் தீர்ந்தது.
47. வாடி வதங்கி – காய்ந்து Withered
மழை பொய்த்து விட்டதால், பயிர்கள் வாடி வதங்கிக் கிடந்தன.
48. விண்ணும் மண்ணும் – வானமும் பூமியும் Sky and land
திரு. லீ குவான் யூ வின் இறுதி ஊர்வலத்தில் விண்ணும் மண்ணும் கண்ணீர் அஞ்சலி செலுத்தின.
49. ஈடு இணை – சமமான Comparable
அரசியல் தலைவர்களுள் திரு. லீ குவான் யூ அவர்கள் ஈடு இணையற்றவர்.
50. கரடு முரடு – மேடு பள்ளம், ஒழுங்கற்ற Rough / Mean
சிலர் பார்ப்பதற்குக் கரடு முரடாக இருந்தாலும், பழகினால் மென்மையானவர்களாகவே இருப்பார்கள்.
51. கல்வி கேள்வி – படிப்பறிவு Education
நாட்டின் மன்னன் கல்வி கேள்விகளில் சிறந்தவனாக இருப்பது அவசியம்.
52. குப்பை கூளம் – தேவையற்ற பொருட்கள் Garbage
சிங்கப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, குப்பை கூளமற்ற சுத்தமான நாடு என்பது தான்.
53. சாடை மாடை – மறைமுகமாக Indirectly
சாடை மாடையாகப் பேசாமல், நேரிடையாகப் பேசினால், எப்பேர்ப்பட்ட பிரச்சினைக்கும் தீர்வு காணலாம்.
54. சொத்து சுகம் – உடைமைகள் Properties
தந்தையின் சொத்து சுகம் நிறைய இருந்தும், முத்து உழைத்து வாழவே விரும்பினான்.
55. மப்பும் மந்தாரமும் – கருமையான மேகம் Cloudy
மழை வருவதற்கு அறிகுறியாய் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
56. மலரும் மணமும் – பூவும், அதன் வாசனையும் Flower and Fragrance
தேவனும் சீதாவும் மலரும் மணமும் போல மனமொத்த தம்பதியினர்.
57. மூலை முடுக்கு – எல்லா இடங்களிலும் Everywhere
காணாமல் போன மோதிரத்தை, கமலா மூலை முடுக்குகெல்லாம் தேடினாள்.
58. வம்பு தும்பு – சண்டை சச்சரவு Fight / Conflict
சங்கரன் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் சாதுவாக இருப்பவன்.
59. வாட்ட சாட்டம் – நல்ல உடலமைப்பு Gigantic
குத்துச் சண்டை வீரர்கள் தங்கள் உடலை வாட்ட சாட்டமாக வைத்து இருப்பர்.
60. விருப்பு வெறுப்பு – விரும்புவதும் வெறுப்பதும் Likes & Dislikes
துறவிகள் விருப்பு வெறுப்பு இன்றி வாழ்பவர்கள்.
61. ஓட்டை உடைசல் – பயனற்ற பொருட்கள் Trash
தீபாவளிக்கு வீட்டைச் சுத்தம் செய்த கவிதா, ஓட்டை உடைசல்களை எல்லாம் தூக்கி எறிந்தாள்.
62. நெளிவு சுளிவு – உத்திகள் Techniques
கணக்குப் பாடத்தின் நெளிவு சுளிவு தெரிந்ததால், கோமதியால் முழு மதிப்பெண்கள் பெற முடிந்தது.
63. முட்டி மோதி – கடுமையாக உழைத்து Work hard
வறுமையில் வாடிய போதும் கவின் முட்டி மோதி மேற்படிப்பைத் தொடர்ந்தான்.
64. வற்றி வறண்டு – காய்ந்து Dry
மழை இல்லாததால் ஆறுகள் எல்லாம் வற்றி வறண்டு இருந்தன.